ஜேர்மனி சக்தி நிலைமாற்றம்

“Energiewende” என்ற ஜேர்மன் மொழிப்பதம் வெற்றிகரமான விதத்தில் ஆங்கில மொழிக்குள் எடுத்து வரப்பட்டுள்ளது. அதன் பொருள் சக்தித்துறையை முழுமையாக மீள்கட்டமைப்புச் செய்வதற்கான ஜேர்மனியின் அபிலாசைகள் என்பதாகும். திட்டவட்டமான விதத்தில் குறிப்பிடுவதாக இருப்பின், அது ஜேர்மன் நாட்டின் “அணு மற்றும் கனிய எண்ணெய் எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை நோக்கிய அரசியல் ரீதியான கண்காணிப்புடன் கூடிய நகர்வினைக்” குறிக்கின்றது1. அதன் சாதாரண மொழிபெயர்ப்பு “சக்தி மாற்றம்” என்பதாகும். அது சக்தியின் பாதையில் ஏற்படும் ஒரு மாற்றம் குறித்த கருத்தை முன்வைக்கின்றது. இந்த நிலை மாற்றத்தின் நோக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை குறைத்துக் கொள்வதும் அதேபோல சக்தி இறக்குமதிகள் மீது ஜேர்மனி தங்கியிருக்கும் நிலையை குறைத்துக் கொள்வதுமாகும்.

கிறிஸ்தவ மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேக்கல் அவர்களின் அரசாங்கத்தின் அடிப்படையான சக்தி தொடர்பான அரசியல் நகர்வு ஜப்பான் புகுஷிமா அணு உலை பேரழிவின் மூலமும், அதனையடுத்து அதிகரித்து வந்த பொதுமக்களின் அழுத்ததின் விளைவாகவும் தூண்டப்பட்டிருந்தது. அதனையடுத்து பெருந்தொகையான ஜேர்மன் அணு உலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டதுடன், எஞ்சியிருக்கும் அணு உலைகள் 2022 ஆம் ஆண்டில் மூடப்படவுள்ளன. குறிப்பாக, காற்று மற்றும் சூரிய ஒளி சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மீதான முதலீடு பெருமளவுக்கு மேம்படுத்தப்பட்டதுடன், பச்சை வீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தை 2020 ஆம் ஆண்டவில் 40 சதவீதமாகவும், 2050 ஆம் ஆண்டளவில் (1990 ஆம் ஆண்டின் மட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது) 80 சதவீதமாகவும் குறைத்துக்கொள்ளும் ஒரு கொள்கை முன்னெடுக்கப்பட்டது.

சக்தி நிலைமாற்றம் எதிர்கொள்ளும் அத்தியாவசியமான ஒரு சவால் தற்போதைய தேசிய மின் தொகுப்பின் விரிவாக்கமாகும். உற்பத்தி செய்யப்படும் சக்தி நாட்டுக்குள் நம்பகமான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதனை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு பல மில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி மூலாதாரங்களிலிருந்து உருவாக்கப்படும் சக்தி உயர் தேவைப்பாடு நிலவி வரும் காலப் பிரிவுகளின் போது மிகவும் தாக்கமான விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டுமானால், களஞ்சியப்படுத்தல் தொழில்நுட்பங்கள் விருத்தி செய்யப்படுவது அவசியமாகும்.

“புதிய மீள் உருவாக்க சக்தி வளங்களை நோக்கிய நகர்வு ஜேர்மனிய பொருளாதாரத்தை புத்தாக்க இயல்பைக் கொண்டதாகவும், போட்டித்திறன் கொண்டதாகவும் மாற்றியமைக்கும்” எனக்குறிப்பிடும் ஜேர்மனியின் முன்னாள் சுற்றாடல் அமைச்சர் பீற்றர் அல்ட்மயர், அதன் காரணமாக நீண்ட காலத்தில் அது பெருமளவுக்கு ஏற்றுமதி வாய்ப்புக்களை வழங்குமெனவும் கூறுகின்றார். எவ்வாறிருப்பினும், இச் செயற்பாடு பூர்த்தி அடைவதற்கு பல தலைமுறைகள் காலம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், “Energiewende “ என்பது இரண்டாவது உலகப்போரினை அடுத்து இடம்பெற்ற புனரமைக்குப் பின்னர் ஜேர்மன் மேற்கொள்ளும் மிகப் பெரிய உள்ளகட்டமைப்புக் கருத்திட்டமாக இருந்துவருகின்றது.

1Source: www.dw.com

‘Energiewende’ தொடர்பான ஒரு சில தலைப்புச் செய்திகள்:

  • நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு என்பற்றை எரிப்பதானது எமது காலநிலையை மித மிஞ்சிய நிலையில் சூடாக்குகின்றது. எமது தற்போதைய சக்தி வளங்கள் நிலைத்து நிற்கக்கூடியவையாக இல்லை. “Energiewende” இன் முக்கியமான நோக்கங்களில் ஒன்று வழங்கப்படும் சக்தியின் காபன் நீக்கத்தை மேற்கொள்வதாகும். புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை நோக்கிச் செல்வதன் மூலமும் உயரளவிலான செயற்திறனுக்கு ஊடாக கேள்வியை குறைப்பதன் மூலமும் இது மேற்கொள்ளப்படும்.
  • சக்தி நிலைமாற்றம் பசுமை புத்தாக்கங்களை தூண்டுவதுடன், தொழில்களையும் உருவாக்குகின்றது. மேலும், பசுமை தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியாளர் என்ற முறையில் ஜேர்மனியை நிலைநிறுத்துவதற்கும் அது உதவுகின்றது.
  • அணுசக்தியுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அபாய ஏதுக்கள், செலவுகள் மற்றும் தீர்க்கப்படாத கழிவுப் பொருள் பிரச்சினை என்பன காரணமாக ஜேர்மனி அணு சக்தியை நிராகரிக்கின்றது. அது தவிர அணுசக்தி வருங்கால உலகின் சக்தி வளங்களில் ஒரு முக்கியமான வகிபாத்திரத்தை வகிப்பதற்கான ஆற்றலையும் கொண்டிருக்கவில்லை.
  • புதுப்பிக்கத்தக்க இயல்பிலான சக்தி வளங்கள் ஜேர்மனி சக்தி இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நிலையை குறைப்பதுடன், கனிய எண்ணெய் எரிபொருள்களின் முன்னறிந்து கொள்ளமுடியாத விலைத்தளம்பல்களில் இருந்தும் ஜேர்மனிக்கு பாதுகாப்பு வழங்குகின்றது. வெளிநாட்டு அரசியல் அழுத்தங்களிலிருந்தும் அதற்கு பாதுகாப்பு வழங்குகின்றது.

ஹெண்ரிச் போவல் (Heinrich Boell) மன்றத்தினால் பிரசுரிக்கப்பட்ட “The German Energiewende Book” பிரசுரத்திலிருந்து பெறப்பட்டது.

மீள்புத்தாக சக்தியின் எதிர்காலம் குறித்த வாதங்கள் தொடர்பாக மேலும் விடயங்களை தெரிந்து கொள்வதற்கு பார்க்கவும்;:
https://book.energytransition.org.