பசுமைச் சக்தி சாம்பியன் 2016

பசுமைச் சக்தி சாம்பியன் கருத்திட்டம் 2017, சக்தி பாதுகாப்பு மற்றும் இலங்கையில் சக்தியின் புத்தாக்கம் என்பவற்றை ஊக்குவிப்பதற்கென பொதுமக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் பொருட்டு 2016 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட முன்னெடுப்பின் ஒரு தொடர்ச்சியாகும்

இப்பிரச்சார இயக்கத்தின் ஒரு பாகமாக ஒரு போட்டி நடத்தப்பட்டது. நிலைத்து நிற்கக்கூடிய மற்றும் தூய்மையான சக்தி தீர்வுகளுக்கான ஒரு முன்மாதிரியாக இருக்கும் “பசுமை சக்தி சாம்பியன்” ஒருவரை அடையாளம் காண்பதே அப்போட்டியின் நோக்கமாக காணப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு மத்தியில் பெருமளவுக்கு ஆர்வம் காணப்பட்டதுடன், பெருந்தொகையான தலைசிறந்த கருத்திட்ட முன்மொழிவுகள் போட்டி நெடுகிலும் கிடைக்கப்பெற்றன. கொழும்பு ஆனந்தாக் கல்லூரி வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், தமது கருத்திட்ட முன்மொழிவை அமுலாக்குவதற்கு அக்கல்லூரிக்கு நிதி ஆதரவும் தொழில்நுட்ப நிபுணத்துவமும் வழங்கப்பட்டது.

2017 ஜனவரி மாதத்தில் அமுலாக்கல் கட்டம் பூர்த்தியடைந்த பின்னர் ,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மன் தூதுவர் யோண் ரோட் ஆகியோர் பசுமை சக்தி சம்பியன் போட்டியின் வெற்றியாளருக்கு வழங்கப்படும் சம்பந்தப்பட்ட வசதிகளை உத்தியோகபூர்வமாக கையளித்தார்கள். அது ஒரு சூரிய ஒளி மின் உற்பத்தித் தொகுதியையும் உள்ளடக்கியிருந்ததுடன் தற்பொழுது அது ஆனந்தா கல்லூரியின் விடுதிக்கு சக்தியை வழங்குகின்றது. “ஹரிதநாத” என்ற பெயரிலான ஒரு வைபவ ரீதியான நிகழ்வின் போது இது வழங்கப்பட்டது. மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த விசேட அதிதிகளில் ஒருவராவார்.

ஜேர்மனி வெளிவிவகார அமைச்சு சக்தி வினைத்திறனை விருத்தி செய்வதற்கும் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தியின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும். இலங்கை சூரியசக்தி, உயிரணு திணிவுச் சக்தி மற்றும் காற்று சக்தி என்பவற்றை பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அதி சிறந்த நிலையில் இருந்துவருவதே இதற்கான காரணமாகும்.