பசுமை வலு முதன்மையாளன் 2019

இலங்கை பசுமை வலு முதன்மையாளன் மூன்றாவது பதிப்பானது நாடு முழுவதிலும் இருந்து பல விண்ணப்பங்களை ஈர்த்ததுடன் முறையே அரச துறை, தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் / சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் (சிபிஓ) பிரிவுகளில் இருந்து ஒவ்வொருவர் வீதம் மூன்று பசுமை வலு முதன்மையாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முடிவடைந்தது.

நிபுணத்துவ வழிகாட்டல் மற்றும் பின்னூட்டங்களுடன் அவர்களின் யோசனைகள் மற்றும் விளக்கக்காட்சிகளை மேலும் மேம்படுத்துவதற்காக ஒரு செயலமர்வுக்கு ஒன்பது வெற்றிகரமான விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பசுமை வலுமை முதன்மையாளன் (GEC) 2019 நிகழ்ச்சியானது உற்சாகமாக ஆரம்பிக்கப்பட்டது. செயலமர்வின் முடிவில், ஜெர்மன் தூதரகம்; மின் சக்தி, வலுச் சக்தி மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு; இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை மற்றும் GIZ இலங்கை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளடங்கிய வேட்பாளர்கள் ஒரு சிறந்த நடுவர் மன்றத்தால் மதிப்பீடு செய்யப்பட்டனர். பின்னர் மூன்று முதன்மையாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் புத்தாக்கமிகுந்த மற்றும் நிலையான யோசனைகளை வாழ்க்கையில் கொண்டு வர தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் 4 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

குளியாபிட்டிய நகரத்தில் உயிரியல் வாயுக் கழிவு முகாமைத்துவம், 10 கிலோவாட் சூரியகலத் தொகுதியை நிறுவி சமூகத்தில் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்து நகரத்தில் காணப்பட்ட வினைத்திறனற்ற கழிவு முகாமைத்துவப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தமைக்காக டெக்லா சிறியாணி மற்றும் குளியாபிடிய பிரதேச சபை அணியினர் அரசாங்கத் துறையில் வெற்றிபெற்றனர்.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தால் ஆதரிக்கப்படும் ஒரு தொடக்க நிறுவனமாகிய தேர்மல் ஆர் இண்டஸ்ட்ரீஸ் – இரு-ஸ்ட்ரோக் முச்சக்கர வண்டி இயந்திரங்களை மின்சார இயக்கிகளாக மாற்ற முற்படும் புதுமையான முன்னோடித் திட்டத்திற்காக தனியார் துறை பிரிவில் வெற்றியாளராக உருவெடுத்தது. இத்திட்டம் மூலம் ஒரு அலகிற்கு 68% காபனீரொட்சைட்டுக் குறைப்பு உறுதிப்படுத்தப்படும்.

சமுதாய அடிப்படையிலான நிறுவனங்கள் பிரிவில் பசுமை வலு முதன்மையாளனாக உள்ளூர் கித்துல் கைத்தொழிலை மேற்கொள்வதற்கு நீர்மின்சாரத்தைப் பயன்படுத்தல், மின்னுற்பத்தி மற்றும் மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை உறுதி செய்வதற்காகவும் அருகிலுள்ள பாடசாலையில் சூரிய சக்தி கூரை அமைப்பை நிறுவியமை, கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சூழல் நட்பு உற்பத்தி முறைகளை உருவாக்கியமை ஆகியவற்றிற்காக சபரகமுவ மக்கள் மன்றத்தைப் (சபரகமுவ ஜனதா பதனம) பிரதிநிதித்துவப்படுத்தும் சுகத் சந்திரசேன தெரிவு செய்யப்பட்டார்.

பசுமை வலு முதன்மையாளன் 2019 ஜேர்மனிய மத்திய வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்டதுடன் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை மற்றும் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைச்சுடன் இணைந்து Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) GmbH ஆனது செயல்படுத்தியது.

திட்டத்தின் முதன்மை முக்கியத்துவம் என்னவென்றால், புதுப்பிக்கத்தக்க வலுவின் வடிவில் எதிர்காலத்திற்கான வலு அடிப்படையாக இருக்கும் ஒரு பகிரப்பட்ட தொலைநோக்கினை நிறுவுவதாகும். வெற்றியடைந்த போட்டியாளர்கள் நாட்டில் நிலைபெறுதகு வலுவிற்கான சிறந்த நடைமுறை மாதிரிகளைக் காண்பிப்பதில் பெருமளவில் வெற்றி பெற்ற அதே நேரத்தில் எதிர்காலத்தில் இதே போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு வழி வகுத்தன.